கோவை:
“கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈசா மையத்தில் அமைந்துள்ள 112 அடி சிவன் சிலை அமைந்துள்ள இடம் ஆன்மீக தலமாக உருவாகும்” என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


சர்ச்சை சாமியார் ஜக்கி வாசுதேவின் ஈசா யோகா மையம், கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ளது. இங்கு 112 அடி உயரத்தில் “ஆதியோகி” சிலை திறப்பு விழா இன்று நடந்தது’

இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இந்த சிவன் சிலை திறக்கப்பட்டுள்ள இடம் மிகப் பெரிய ஆன்மீக தலமாக மாறும். யோகா எனும் கலை தற்போது பல விதங்களில் கற்றுத்தரப்படுகிறது. யோகா என்பது மிகவும் பழமையான ஒன்று. அதே வேளையில், புதுமையானதாகவும் யோகா திகழ்கிறது. யோகா நிரந்தரமானது. ஆனால் தற்போதுதான் அது வளர்ந்து வருகிறது. யோகாவின் மிகப் பெரிய அழகே இதில்தான் இருக்கிறது.

யோகா போன்ற கலையை நாம் மிக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஜீவ நிலையிலிருந்து சிவன் நிலைக்கு உயர்த்துவதே யோகம். யோகா பயில்வதால், மூலம் மனம், உடல், புத்தி அனைத்தும் உயர்வடையும். என்னுள் என்கிற எண்ணம் மறைந்து, நம்மில் என்ற எண்ணம் உருவாகும்.

சிவன் என்றதும் அவர் குடியிருக்கும் இமயமலை நினைவுக்கு வருவது போல், பார்வதி என்றதும் கன்னியாகுமரிதான் மனதுக்குள் நிழலாடுகிறது. மலையும், சமுத்திரமும் இணையும் அற்புதம் இந்த பாரதத்தில் நிகழ்கிறது. பாம்பும், எலியும் ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் சிவனிடம் பாம்பும், விநாயகரிடம் எலியும் இருக்கின்றன. கார்த்திகேயனிடம் மயில் வாகனம் உள்ளது. இப்படி சிவ குடும்பம் நமக்கு வேற்றுமையில் ஒற்றுமை தத்துவத்தை விளக்குகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.