தமிழக முதல்வராக ஆட்சி அமைக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை அழைக்காதது ஏன் என்பதை ஆங்கில இணைய இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர்.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது:


“நான் கடந்த 45 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். இந்த காலகட்டத்தில் சர்ச்சைகளையும், முக்கிய சம்பவங்களையும் சந்தித்திருக்கிறேன்.
ஆனால், தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக பொறுப்பேற்ற போதுதான் எனது நடவடிக்கைள் மிகஅதிகமாக பிறரால் உற்று நோக்கப்பபட்டன.

இந்த காலகட்டத்தைப் போல இதற்கு முன் நான் விமர்சிக்கப்பட்டது இல்லை.
சசிகலாவை நான் ஏன் முதல்வர் பதவியேற்க அழைப்பு விடுக்கவில்லை என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழுப்பப்படுகிறது. அதற்கு ஒரே காரணம், அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குதான்.

இந்த வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்ற உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்ட நிலையில் காத்திருப்பதே சரி என்பதால் பொறுமை காத்தேன். தவிர, சசிகலா மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி அல்ல.
எனது இந்த முடிவு பலதரப்பினராலும் வரவேற்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து நான் சட்ட நிபுணர்கள் பலரது ஆலோசனையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அது உண்மைதான். அரசின் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோஹத்கி, , சட்ட நிபுணர்களான சோலி சொராப்ஜி மற்றும் கே. பராசரன் ஆகியோரிடமும் சட்ட ஆலோசனை பெற்றேன்.
இது குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சருக்கும் அறிக்கை அளித்தேன். ஆனால் அந்த அறிக்கையில் உள்ள விசயங்கள் பற்றி து ஒரு ஆளுநர் என்ற முறையில் நான் வெளிப்படுத்த முடியாது” என்ற வித்யாசாகர், “ ஊடகங்கள் வாயிலாக எனது நடவடிக்கை குறித்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்தவர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த காலகட்டம் பற்றியும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்:
“”சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, சில முறை அவரைச் சென்று பார்த்தேன். அப்போது ஒரு முறை மட்டும், அவர் தான் குணமடைந்து வருவதாக தனது கட்டை விரலை தூக்கிக் காண்பித்தார்” என்று வித்யாசகர் தெரிவித்துள்ளார்.