அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் வேலைக்காக அமெரிக்கா வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் தானாகவே குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக கடந்த திங்கட்கிழமை அன்று பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் விதித்த முக்கிய உத்தரவுகளில் இதுவும் ஒன்றாகும்.
டிரம்பின் இந்த உத்தரவால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பெரிதும் கலக்கம் அடைந்துள்ள நிலையில் இதனை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்துள்ளன.
குறிப்பாக, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் அதிகாரத்தில் உள்ள வாஷிங்டன், அரிசோனா, இலினோய், ஒரேகான் ஆகிய நான்கு மாநிலங்கள் இதனை பலமாக எதிர்த்து வருகிறது.
அதிபருக்கு உச்ச அதிகாரங்கள் உள்ளது என்றபோதும் அவர் தன்னிச்சையாக முடிவெடுக்க அவர் ஒன்றும் அரசர் அல்ல என்று விமர்சித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடனேயே இதனை செயல்படுத்த வேண்டும் என்று அம்மாநிலங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டன.
டிரம்பின் இந்த நடவடிக்கை அப்பட்டமான அரசியல் சட்ட விதிமீறல் என்று கண்டித்துள்ள பெடரல் நீதிமன்ற நீதிபதி ஜான் கோஜிஹினோர் அதிபரின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை பீதி : குறை பிரசவத்தில் குழந்தை பெறும் அவதியில் தள்ளப்பட்ட யுவதிகள்