அமெரிக்க ஜனாதிபதியாக ஒருவர் மூன்றாவது முறை போட்டியிட தேவையான அரசியலமைப்பு சட்டதிருத்தத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக ஆளும் குடியரசுக் கட்சியின் எம்.பி ஆண்டி ஓகிள்ஸ் அமெரிக்க காங்கிரஸில் கூட்டு அவைத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டப்படி அமெரிக்க அதிபராக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.

இந்த புதிய சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால் தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிட வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த திருத்தத்தின் மூலம் நாட்டின் வலுவான தலைமை உறுதி செய்யப்படும் என்றும் இது நமது நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும் ஆண்டி ஓகிள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “பைடன் நிர்வாகத்தின் கீழ் அவர் செய்த தவறுகளைச் சரிசெய்ய தேவையான அனைத்து வளங்களையும் ஜனாதிபதி டிரம்பிற்கு வழங்குவது அவசியம்.

அமெரிக்க மக்களுக்கும் நமது மகத்தான தேசத்திற்கும் தான் விசுவாசம் என்பதை ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார். ‘நவீன வரலாற்றில் நமது நாட்டின் வீழ்ச்சியை மாற்றி அமெரிக்காவை மீண்டும் மகத்துவத்திற்கு கொண்டு வரக்கூடிய ஒரே மனிதர் டிரம்ப் தான் என்பதை நிரூபித்துள்ளார்'” என்று இந்த மசோதாவை அவையில் அறிமுகப்படுத்தி பேசிய ஓகிள்ஸ் கூறினார்.