வேப் எனப்படும் புகையிலைப் பொருட்கள் கடத்தல்காரர்களிடமிருந்து மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் 2,00,000 மலேசிய ரிங்கிட்டுகளை (RM200000) (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 39.26 லட்சம்) வரை லஞ்சமாக பெற்றுவந்துள்ளனர்.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) சரக்கு ஆய்வு மையத்திலிருந்து இலவச வணிக மண்டல (FCZ)க்கு செல்லும் லாரிகளிடமிருந்து அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்த தகவலைத் தொடர்ந்து சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

ஊழல் தடுப்புத் துறையினர் மேற்கொண்ட இந்த சோதனையில் லாரிகளின் அளவு மற்றும் அதில் ஏற்றிச் செல்லப்படும் பொருட்களின் எடையைப் பொறுத்து லஞ்சம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது.

ஒரு டன் லாரிக்கு, RM150, மூன்று டன் லாரி RM300, ஐந்து டன் லாரிக்கு RM500 மற்றும் ஐந்து டன்களுக்கு மேல் RM750 என்று லஞ்சம் வசூலிக்கட்டது வந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் FCZ வழியாக 20 லாரிகள் செல்லும் நிலையில் நாளொன்றுக்கு சுமார் RM4,000 முதல் RM6,000 வரை சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றுவந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த லாரிகள் பல்வேறு குற்றங்களில், குறிப்பாக வேப் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

மூன்று மாத கண்காணிப்பு நடவடிக்கைக்குப் பிறகு Ops Airways என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் கீழ் ஜனவரி 21ம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், வேப், பணம், கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட RM17.9 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

2023 முதல் அதிகாரிகள் துணையுடன் இந்த வேப் கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்ததாகவும், இதுதொடர்பாக ஆறு சுங்க அதிகாரிகள் மற்றும் ஆறு நிறுவனங்களின் இயக்குநர்கள் உட்பட 20 முதல் 60 வயதுக்குட்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஐந்து நாள் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.