தமிழகம் : பிடிபடும் பெரும்பாலான குற்றவாளிகள் வழுக்கி விழுவது ஏன்? – ஒரு ஆய்வு

Must read

சென்னை

மிழகத்தில் காவல்துறை பிடிக்கும் பெரும்பாலான குற்றவாளிகள் வழுக்கி விழுந்து கைகளை உடைத்துக் கொள்வதாகத் தகவல் வருவது வழக்கமாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வன்முறை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.    இரு சக்கர வாகனத்தில் வந்து கழுத்து சங்கிலியைப் பறித்துச் செல்லும் குற்றங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.   அத்துடன் வன்முறை சம்பவங்கள் மாணவர்கள் இடையிலும் சகஜமாக நடைபெற்று வருகிறது.  சமீபத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தியால் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் இந்த குற்றச் சம்பவங்களில் பிடிபட்ட குற்றவாளிகள் காவல்நிலைய கழிப்பறைகளில் வழுக்கி விழுந்து கைகள் முறிவதாக கூறப்படுவதும் தொடர்ந்து வருகிறது.   செய்தித் தாள்களிலும், சமூக வலைத் தளங்களிலும் இது போன்ற அடிபட்ட கைதிகள் கையில் மாவுக்கட்டுடன் தோன்றும் புகைப்படங்கள் கிட்டத்தட்ட தினந்தோறும் வெளியாகின்றன.

குற்றவாளிகள் தொடர்ந்து கழிப்பறையில் வழுக்கி விழுந்து கை எலும்பு முறிவது எவ்வாறு நடக்கும் என பலரும் கேள்விகள் எழுப்புகின்றனர்.   இது குறித்து வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான சுதா ராமலிங்கம், “குற்றவாளிகள் நடந்தவை குறித்துப் பேச உரிமை உள்ளது.  அவர்கள் நீதிபதியின் முன்னால் தங்களை எங்கு எப்போது காவல்துறையினர் கைது செய்தனர் என்பதையும் எவ்வாறு நடத்தப்பட்டோம் என்பதையும் தெரிவிக்க உரிமை உள்ளது.

இந்த கைதிகள் மீது வன்முறை ஏவப்பட்டிருந்தால் காவல்துறை அதிகாரிஅக்ள் தண்டிக்கப்பட வேண்டும்.  இது காவலில் நடக்கும் வன்முறை ஆகும்.  இது குறித்து மாநிலம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையங்கள் தலையிட்டு விசாரணை செய்ய வேண்டும்.   குற்றம் நிரூபிக்கும் வரை கைது செய்யப்பட்டவர்களை நிரபராதிகளாக நடத்த வேண்டும் என சட்டம் கூறுகிறது.   குற்றம் நிரூபிக்கப் பட்டாலும் அவர்களை காவல்துறையினர்  அடிப்பது மனித உரிமைக்கு எதிரானது.” என கூறி உள்ளார்.

முன்னாள் காவல்துறை இயக்குநர் லத்திகா சரண், “இந்த தாக்குதல் பொதுவாக காவல்துறையினர் செய்வது இல்லை.  உதாரணமாக சங்கிலி பறிக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்படும்  முன்பே அவர்களைப் பொதுமக்கள் அடித்து உதைப்பது உண்டு.   எனவே காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்யும் போது அவர்கள் மீது உள்ள காயங்கள் குறித்த தகவலை நீதிபதிக்கு அளிக்க வேண்டும்.   எனவே காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதாக கூறுவது தவறானதாகும்” என தெரிவித்துள்ளார்.

மனித உரிமை வழக்கறிஞர் ஆட்டோ சந்திரன் கடந்த 2006 ஆம் ஆண்டு எழுதிய ‘லாக் அப்’ என்னும் புத்தகம் விசாரணை என்னும் பெயரில் திரைப்படமாக வெளி வந்தது.  அதில் விசாரணையில் கைதிகள் துன்புறுத்துவது பற்றி விரிவாகக் காட்டப்பட்டிருந்தது.  ஆட்டோ சந்திரன், “பத்திரிகையாளர்களிடம் இது போன்ற சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் அளிக்கும் போது இது குறித்து கேள்விகள் எழுப்ப  வேண்டும்.   அதற்கு துப்பறிவாளராக இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை.

காவல்துறை மக்களின் பாதுகாப்புக்காக உள்ளது எனவும் அந்த துறை பலம் பொருந்தியது என்பதும் சரியானதாகும்.   ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடித்து கைகளை உடைக்க எந்த உரிமையும் கிடையாது.  இதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.  அவர்களும் காவல்துறையினரின் இத்தகைய வன்முறைச் செயலுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.

பெயர் தெரிவிக்க விரும்பாத காவல்துறை உயரதிகாரி, “இவ்வாறு ஒரு சில நேரங்களில் இளநிஅலி அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிக்கின்றனர்.  அது அவர்களுடைய வேலைப்பளு மற்றும் குடும்ப  சூழ்நிலைகளால் நடக்கிறது.   அது மட்டுமின்றி கொடூர குற்றங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் மீது அனைவருக்கும் ஒருவித கோபம் உண்டாகிறது.

குறிப்பாக ஒரு குழந்தையைக் கொன்றவர் அல்லது பலாத்காரம் செய்த குற்றவாளிகளைப் பொதுமக்கள் அடித்து நொறுக்கி விடுகின்றனர்.  அதையே ஒரு சில அதிகாரிகளும் செய்து விடுகின்றனர்.   இதற்குக் காரணம் அந்த அதிகாரிகளுக்கு அந்த குழந்தை தங்கள் குழந்தையைப் போன்றது என மனதளவில் கருதுவது ஆகும்.   இது தவறானது என்றாலும் காவல்துறையினரும் மனிதர்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article