சென்னை: PM SHRI பள்ளி திட்டத்தில் இணைந்த தமிழ்நாடு அரசு, நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும் என தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் புதிய கல்விக் கொள்கையை எந்நாளும் எதிர்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும் என்று கூறியதுடன், தமிழக அரசு, மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து தான் வருகிறது என்றார். மேலும், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்று கூறியவர், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியது தான் எங்களுடைய எண்ணம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்தியஅரசு சார்பில் பிஎம்ஸ்ரீ என்ற பள்ளி திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைந்துள்ளது. இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் PM SHRI பள்ளி திட்டத்தில், மத்திய கல்வி அமைச்சகத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்யவு செய்துள்ளது என்று நேற்று (மார்ச் 15ம் தேதி வெள்ளிக்கிழமை) வெளியான பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டான 2024-25 ஆம் ஆண்டு தொடக்கத்தில் PM (SHRI) பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநிலத்தால் கையெழுத்திடப்படும், என்று தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கும், கல்வி அமைச்சகத்துக்கும் இடையேயான இந்த கூட்டாண்மை வலுவான முறையில் உள்ள மத்திய-மாநில உறவுகளை குறிக்கிறது. “இந்த முயற்சியை நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம், ஏனெனில் இது தமிழக மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது” என்று அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.
PM SHRI பள்ளி முன்முயற்சியானது மையத்தின் மத்திய நிதியுதவி திட்டமாகும். KVS மற்றும் NVS உட்பட மத்திய அரசு, மாநில/UT அரசாங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் 14,500 PM SHRI பள்ளிகளை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியானது பல்வேறு வகையான கற்றல் அனுபவங்களை வழங்குவதோடு, அனைத்து மாணவர்களுக்கும் கற்றலுக்கு உகந்த நல்ல உள்கட்டமைப்பு மற்றும் பொருத்தமான ஆதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கை திட்டத்தின்கீழ் வரும் இந்த PM SHRI பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு கூறி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றன.