டில்லி:

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முடிவில் அனைவரையும் விடுதலை செய்து டில்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.

இதைதொடர்ந்து 2ஜி வழக்கு தொடர்பான ‘2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதி வெளியிட்டார். டில்லியில் நடந்த இந்த விழாவை தொடர்ந்து ஆ.ராசா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முன்னாள் இந்திய தலைமை கணக்காயர் (சிஏஜி) வினோத் ராய் ஒரு ஒப்பந்த கொலைகாரரை போல் செயல்பட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2ம் கால ஆட்சியை கொலை செய்வதற்காக அவர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்.

அவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி, ஏமாற்று வேலைகளிலும் ஈடுபட்டார். இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதோடு ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரதி மிட்டல் எனக்கு எதிராக சதி செய்தார். மொபைல் சந்தைக்குள் புதியவர்கள் நுழைவதை அவர் தடுத்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருந்தார். இதனால் தொலைபேசி கட்டணத்தை என்னால் குறைக்க முடிந்தது. ஸ்பெக்ட்ரம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். எனக்கு நடந்த நிகழ்வுகளை பார்த்து அவர் உடைந்துபோனார். இதற்காக அவர் வருத்தமடைந்தார். மேலும் இந்த வழக்கை மீடியாக்கள் ஒரு சார்பாக செய்தி வெளியிட்டன’’ என்றார்.