கேப்ரியல் புயல் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் இன்றுவரை தொடர்கிறது. இந்த நிலையில், புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்படிருந்த நியூசிலாந்தில்  6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) படி, இந்த நிலநடுக்கம் வெலிங்டனுக்கு அருகிலுள்ள லோயர் ஹட்டிலிருந்து வடமேற்கே 78 கிமீ தொலைவில் ஏற்பட்டது. இந்த நடுக்கம் 48 கிமீ (30 மைல்) ஆழத்தில் உணரப்பட்டதாக அரசு நில அதிர்வு கண்காணிப்பு ஜியோனெட் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பராபரமு நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறி பொதுவெளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த  நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நடுக்கம் 19:38:07 (உள்ளூர் நேரம்) உணரப்பட்டது, ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) உறுதிப்படுத்தியது.

நியூசிலாந்தை தாக்கிய ‘கேப்ரியல்’ புயல்! பல பகுதிகள் இருளில் மூழ்கியது…