சென்னையை அடுத்துளள எண்ணூரில் மூன்று வயது குழந்தை கொலை செய்யப்பட்டு குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மீனவர் பழனி. இவரது மனைவி ராணி. இவர்களது மூன்று வயது மகள் ரித்திகா,  நேற்று முன்தினம் மதியம் ரித்திகா வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த ரித்திகாவின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடினார்.  பிறகு எண்ணூர் காவல் நிலையத்தில் பழனி புகார் தெரிவித்தார்.

காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் எர்ணாவூர், எண்ணூர் பகுதிகளில் சேகரித்த குப்பையை வாகனம் மூலம் சேகரித்து திருவொற்றியூர் கரிமேடு அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டியபோது மாயமான சிறுமி ரித்திகா வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக, குப்பையோடு கிடந்தார்.

குழந்தையின் பின்தலையில் காயம் இருந்தது. உடனடியாக  மாநகராட்சி ஊழியர்கள் எண்ணூர் காவல் நிலையத்துக்கு  தகவல் அளித்தனர். ரித்திகா சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், காவல்துறையினர்.

காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் ரித்திகாவை யாரோ கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.  இந்த நிலையில் குழந்தை ரித்திகாவை கொன்றதாக, பக்கத்து வீட்டுப் பெண்மணி ரேவதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை ரித்திகா அணிந்திருந்த நகைக்காக அவரைக் கொன்றதாக ரேவதி தெரிவித்துள்ளார் என்று காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேவதியிடமிருந்து குழந்தை ரித்திகாவின் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.