மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் கண்கவர் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்.27 முதல் மே 11வரையிலான 2 வாரங்களில் அரசு, மாநகராட்சி கட்டிடங்கள், பெயர் பலகைகள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 1,072 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.