ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு ஆகிய இடங்கள் முந்திரி காடுகள் உள்ள வன பகுதியாகும். இங்கு ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் அங்குள்ள நீர்நிலைகள்வறண்டு விட்டன. எனவே குடிநீருக்காக மான்கள் ஊருக்குள் வருகின்றன. அப்படி அவை வரும் போது நாய்கள் மான்களை துரத்தி கடிக்கின்றன.

இந்நிலையில் நேற்று தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்து விட்டது. மானை கண்ட நாய்கள் துரத்தி சென்று மானை கடித்தன. இதில் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இத்தகைய சூழலில், சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் பகுதி வாழ் பொதுமக்கள். வனப்பகுதியில் வன உயிரினங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள அரசு தண்ணீர் வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.