பிரதமரை விமர்சித்ததற்காக சிறையில் வாடும் ஏழை தலித் இளைஞர்.

மேல்ஹந்தி, உத்திரப் பிரதேசம்

பிரதமரையும் உத்திரப் பிரதேச முதல்வரையும் விமர்சித்ததற்காக ஒரு ஏழை தலித் இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் மேல்ஹந்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு என்னும் ஏழை தலித் இளைஞர்.  அந்த ஊரில் உள்ள சுமார் 100-150 தலித் குடும்பங்களில் ராஜுவின் குடும்பமும் ஒன்று.  இவர்கள்  பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் செங்கல் சூளையில் வேலை செய்பவர்கள்.  வருடத்தில் 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே உள்ளூரில் இருப்பவர்கள்.    அங்கு கிடைக்கும் தினக்கூலியை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு ராஜுவின் வயலில் ஊரில் சுற்றித் திரிந்த மாடுகள் புகுந்து பயிர்களை நாசமாக்கி விட்டன.   அந்த மாடுகள் அனைத்தும் உள்ளூரில் உள்ள உயர் ஜாதிப் பிரிவினரான ஜாட் வகுப்பை சேர்ந்தவர்களால் விரட்டி அடிக்கப் பட்டவை.   பயிர்கள் பாழான ஆத்திரத்தில் கோசாலைகள் அமைக்காத உ பி முதல்வரையும் பிரதமர் மோடியையும் ராஜுவும் அவர் நண்பரும் விமரிசித்துள்ளனர்.   அதை யாரோ வீடியோ பதிவாக்கி வெளியிட்டு அது பரவி விட்டது.   பின்பு இதற்காக பஞ்சாயத்து கூட்டப்பட்டு அங்கு ராஜு எழுத்து மூலம் மன்னிப்புக் கடிதம் அளித்துள்ளார்.

ஆனால் உள்ளூர் பா ஜ க பிரமுகர்  ராஜீவ் தோமர் என்பவர் அந்த வீடியோ குறித்து போலிசில் புகார் அளித்துள்ளனர்.   ராஜு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  தப்பி ஓடிய அவரது நண்பரை போலீஸ் தேடி வருகிறது.   ராஜு மேலும் அவர் நண்பர் மீதும் மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இது குறித்து அவருடைய குடும்பத்தினர், “பயிர்கள் இந்தக் கால்நடைகளால் பாழாவது வழக்கமாகி விட்டது.  ராஜுவின் நிலத்தில் இது போல நடப்பது மூன்றாவது முறையாகும்.   முறையான கோசாலைகளை அரசு அமைத்திருந்தால் இப்படி பயிர்கள் பாழாகி இருக்காது.   பயிர்கள் பாழான மன அழுத்தத்தில் அவர் இது போல விமர்சனம் எழுப்பி இருக்கிறார்.” என தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர்.
English Summary
A dalit youth was arrested for abusing PM