ஹரியானா மாநிலம் கோகானாவை சேர்ந்த ஏழைச் சிறுவன் அஜய் மாலிக் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையின் கடின உழைப்பினாலும் தனி திறமையினாலும் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.

ajay_malik

டென்னிஸ் போட்டிகளில் தேசிய சாம்பியனாக உருவெடுத்திருக்கும் அஜய் மாலிக்கின் பின்புலம் மிகவும் எளிமையானது. அஜயின் தந்தை அஜ்மீர் மாலிக் இந்திய ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவராவார். போட்டியின் இடைவேளைகளில் சில வாழைப்பழங்களும் குளுக்கோசும் கூட வாங்கித்தர இயலாத ஏழ்மை நிலையிலேயே அவர் இருக்கிறார். ஆனாலும் இந்தப் பணக்கார விளையாட்டில் பயிற்சிபெறும் இளைஞர்கள் அனுபவிக்கும் எந்த வசதியையும் அனுபவிக்காமல் சாதாரண உணவு உண்டு, சுகாதாரமற்ற சூழலில் வாழ்ந்தாலும் அனைவரையும் மிஞ்சிய திறமையும் தன்னம்பிக்கையுமே அஜய் மாலிக்கை சாம்பியனாக்கியிருக்கிறது.
அஜய் மாலிக்கின் பயிற்சியாளர் யார் தெரியுமா? அவரது சகோதரர் சோம்பிர் மாலிக்தான். அவர் டென்னிஸ் முறைப்படி கற்றவர்கூட இல்லை. டிவியில் டென்னிஸ் பார்த்து கற்றுக்கொண்டவதானாம். அவரது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் விளையாட்டை தொடர இயலவில்லை. ஆனால் தனது திறமையையும் ஆர்வத்தையும் அஜயிடம் புகுத்தி தம்பியின் வெற்றியில் இவர் புளங்காகிதம் அடைகிறார்.
அஜயின் தந்தை அஜ்மீர் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது அஜய்க்கு 3 லட்சம் செலவில் தனது வயல் இருந்த இடத்தில் ஒரு எளிமையான டென்னிஸ் மைதானம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். இதில்தான் அஜய் தனது அத்தனை பயிற்சிகளையும் மேற்கொண்டார். நீங்கள் மண் தரையில் விளையாடியதற்கும் கடினமான டென்னிஸ் மைதான தரையில் ஆடியதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்க்கப்பட்ட போது. தரையின் நிறம் மட்டுமே வித்தியாசம் மற்றபடி ஒன்றுமில்லை என்று பதிலளிக்கிறார் அஜய்.
அஜயின் திறமையும் முயற்சியும் அவருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித்தரும் என்கிறார்கள் டென்னிஸ் ஆர்வலர்கள்.