திருச்சி: 

தின்பண்டம் என நினைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன் தலைசிதறி பலியானார். இந்த கோர சம்பவம் திருச்சி அருகே நடைபெற்றுள்ளது.

சமீபத்தில்தான் கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிகுண்டு வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சி அருகே நாட்டு வெடிகுண்டை  தின் பண்டம் என நினைத்து கடித்த சிறுவன் பரிதாபமாக பலியாகி உள்ளான்.

திருச்சி அருகே உள்ள  தொட்டியம்  அருகே உள்ள கலக்கரை பகுதியில் வசித்து வரும்  பூபதி என்பவரின் 6 வயது மகன் விஷ்ணு தேவ். இவரது  வீட்டு தோட்டத்தில் மீன்களை பிடிக்க வைத்து இருந்த நாட்டு வெடிகுண்டை, சம்பவத்தன்று  தின்பண்டம் என்று நினைத்து  கடித்துள்ளார்.

அப்போது, பயங்கர சத்தத்துடன்  வெடி வெடித்ததில், சிறுவன் விஷ்ணுவின் தலைசிதறியது. சம்பவ இடத்திலேயே அவர்  உயிரிழந்தார்.  இந்த சம்பவம்  குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல், அவனது பெற்றோர் சிறுவனின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு மர்ம நபர் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அங்கு வந்த  கிராம நிர்வாக அலுவலர், விசாரணை மேற்கொண்டதில், சம்பவம் நடைபெற்றது உண்மை என்பது தெரிய வந்துள்ளது.

விசாரணையின்போது, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீன்களை பிடிப்பதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் இறந்த சிறுவனின் உறவினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.