புதுச்சேரி:
புதுச்சேரியில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத் தக்கது.
புதுச்ரியில் உள்ள உள்ள கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் கிரண்பேடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசுத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் கிரண்பேடி, 30 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற திட்டமிட்டுள்ளோம். இந்த தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்றும் கூறினார்.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வருகிற ஜூலை மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றார். மேலும், மத்திய அரசின் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தை தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியது குறித்த கேள்விக்கு, கர்நாடகத்தில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விடும் பட்சத்தில் கடை மடை பகுதியான காரைக்காலுக்கும் நீர் வரும் என நம்புகிறேன். காவிரி நீர் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.