சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எளிதான காரியம் அல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதற்கு நடிகர் கமலஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் சென்னை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால தாமதம் ஆகும் என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் கமலஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்,  நீதிக்கு நீதி தேவை என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,   உச்சநீதி மன்ற நீதிபதி உட்பட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த இயலாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. காவிரிப் படுகையை ஒரு எண்ணேய் பீப்பாயாக மாற்றும் முயற்சிக்கு துணைப் போகும் விதமாகப் பேசுவதும், நடந்து கொள்வது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதித்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உத்தரவை ஆறு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் கமல் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி நதி நீர் குறித்து உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இது வரை மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.