சென்னை,

டிடிவி ஆதரவாளர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ள நிலையில், தங்கள் ஆதரவு எம்எல்ஏக்கள் 12 பேர் எடப்பாடி அரசில் இருப்பதாக கூறி மேலும் கலகலப்பை எற்படுத்தி உள்ளார் டிடிவி தினகரன்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக,  எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்திருந்தனர். அவர்களில் ஜக்கையன் மட்டும் மீண்டும் எடப்பாடி அணிக்கு திரும்பினார்.

இந்த நிலையில் கட்சியின் கொறடா அறிவுறுத்தல் பேரில், 18 சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவியை பறித்து அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் சபாநாயகர் தனபால்.

இதை எதிர்பார்க்காத டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர். இந்நிலையில்,  மேலும் 12 எம்எல்ஏக்கள் சிலிப்பர் செல்களாக எடப்பாடி அரசில் உள்ளனர் என்றும், இதன் காரணமாக சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் போது அவர்கள் வெளிப்படுவார்கள் என்று  டிடிவி தினகரன் மிரட்டியிருக்கிறார்.

ஆனால், தற்போதைய எம்எல்ஏக்களோ, தங்களின் பதவிக்கு உத்தரவாதமில்லாத நேரத்தில் டிடிவி தினகரன் இப்படி காமெடி செய்து வருகிறாரே என்று நகைக்கின்றனர்.