லக்னோ,
உ.பி. சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 11ந்தேதி தொடங்கி மார்ச் 8ந்தேதி முடிவடைகிறது. 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாதி கட்சி, காங்கிரசுடன் கூட்டணி வைத்து போட்டி யிடுகிறது. மேலும் பா.ஜ.க. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி யிடுகிறது. மாயாவதி கட்சியும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க தேசியத்தலைவர் அமித் ஷா , லக்னோவில் வெளியிட்டார்.
”லோக் கல்யான் சங்கல்ப் பத்ரா” (மக்கள் நல்வாழ்வுக்கான உறுதிமொழி) என பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கை 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது.
மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டும், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில், 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி,
பள்ளியில் சிறப்பாக பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணத்தில் சலுகை,
மாநிலத்தின் கனிம வளத்தை கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க தனிப்படை,
மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அரசு பணிகளுக்கான தேர்வில் நேர்முகத் தேர்வு ரத்து போன்ற மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் உள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, “உத்தரப்பிரதேசத்தை தவிர, பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பெரிய மாநிலங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன.
உ.பி. முன்னேறவில்லை. உத்தரப்பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடியை ஒதுக்கியது. ஆனால் மாநிலத்தில் எதுவும் நடக்க வில்லை” என குற்றம் சாட்டினார்.