தனிப்பட்ட தரவுகளைத் தவறாகக் கையாளுதல் முதல் தவறான கட்டணங்கள் வரை பல்வேறு முறைகேடுகள் அரங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்.
ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் விசா விண்ணப்பங்களை செயல்படுத்தும் VFS Global நிறுவனத்தின் இந்திய மையங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் இணைந்து நடத்திய விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020 முதல் 2025 வரை ஐரோப்பிய அதிகாரிகள் தயாரித்த 150-க்கும் மேற்பட்ட ஆய்வு அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டதில், இந்தியாவில் செயல்படும் சில VFS மையங்களில் விண்ணப்பதாரர்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான குறைபாடுகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் பாதுகாப்பற்ற சாதனங்களில் சேமிக்கப்பட்டதாகவும், முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பற்ற மின்னஞ்சல்கள் மூலம் பகிரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய தரவு சேமிப்பு சாதனங்கள் முறையாக அழிக்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சில டிராவல் ஏஜென்ட்கள் போலியான VFS அப்பாயின்ட்மெண்ட்களை விற்றதாகவும், வேலை விசா பெற போலியான வேலை ஒப்பந்தங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல், விரைவாக விசா கிடைக்கும் நாடுகள் மூலம் விண்ணப்பித்து பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் “விசா ஷாப்பிங்” நடைமுறையும் இந்த விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், Premium Lounge போன்ற கூடுதல் கட்டண சேவைகள் விசா ஒப்புதலுக்கு எந்த வகையிலும் உதவாது என்பதை விண்ணப்பதாரர்களுக்கு தெளிவாக தெரிவிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால் பலர் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கட்டணத்தை தவறாக வசூலித்த பின்னர் அதை திருப்பி வழங்கும் நடைமுறையிலும் குழப்பங்கள் இருந்ததாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 2020-ல் திருப்பி அனுப்பப்பட வேண்டிய சில பாஸ்போர்ட்கள் பின்னரும் VFS மையங்களில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற்ற ஷெங்கன் மதிப்பீட்டில், இந்தியாவில் உள்ள VFS செயல்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் GDPR தரவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஐரோப்பிய ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. விசா செயல்முறைகளை தனியார் நிறுவனங்களுக்கு அதிகமாக ஒப்படைப்பது தொடர்பாக கூடுதல் கண்காணிப்பும் தர கட்டுப்பாடும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் VFS Global நிறுவனம் மறுத்துள்ளது. 71 அரசுகளின் கண்காணிப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகவும், தங்களது செயல்முறைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 2001 முதல் இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவையளித்து வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விசா செயல்முறைகளில் தகவல் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் மோசடி தடுப்பு போன்ற விஷயங்களில் இந்த விசாரணை புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
[youtube-feed feed=1]