டெல்லி: தென்னிந்தியாவில் முதன்முறைaயாக சென்னை பெங்களூரு இடையே புல்லட் ரயில் இயக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கர்நாடக மாநிலஅரசும் வழங்கி உள்ளது.
அதன்படி, சென்னை பெங்களூரு மற்றும் பெங்களூரு ஐதராபாத் இடையே மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக சுமார் 1,757 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்க கர்நாடக அரசு தனி அதிகாரியை நியமித்துள்ளது. ,இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, பெங்களூரு – ஹைதராபாத் 2 மணி நேரத்திலும், பெங்களூரு சென்னை 75 நிமிடங்களிலும் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியா நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதற்கு போக்குவரத்தும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது. அதற்காக தமிழ்நாடு உள்பட தென் மாவட்டங்களுக்கு இடையே அதிவேக பசுமை வழிச்சாலைகளை மத்திய, மாநில அரசுகள் அமைத்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கக்கூடிய வகையில், பெங்களூரு-ஹைதராபாத் மற்றும் பெங்களூரு-சென்னை அதிவேக புல்லட் ரயில் திட்டங்களுக்கு கர்நாடக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
தென்னிந்தியாவின் முதல் விரிவான புல்லட் ரயில் வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த லட்சியத் திட்டம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார வரைபடத்தையே மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
இந்த புல்லட் ரயிலானது மணிக்கு 320 முதல் 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக ரயில்கள், தற்போதைய நீண்ட பயண நேரத்தை மிகக் குறுகிய நேரமாக மாற்றுவதோடு, தொழில், கல்வி, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத்-பெங்களூரு அதிவேக ரயில் பாதை சுமார் 607 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. இதில் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணைக்கப்படுகின்றன.
தற்போதைய நிலையில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு இடையேயான ரயில் பயணம் 8 முதல் 12 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும் நிலையில், புல்லட் ரயில் இயக்கம் தொடங்கிய பின்னர் இந்த பயணம் வெறும் 2 மணி 10 நிமிடங்களாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் துமகூரு, சிக்கபள்ளாப்பூர் மற்றும் பெங்களூரு ஊரக மாவட்டங்கள் வழியாக இந்த பாதை செல்லும் நிலையில், அலிபூர், தேவனஹள்ளி விமான நிலையம் அருகே மற்றும் ஹோஸ்கோட்டின் கோடிஹள்ளி பகுதிகளில் முக்கிய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
திட்டத்தின் முழுப் பாதையும் உயர்த்தப்பட்ட மேம்பால ரயில் பாதையாக அமைக்கப்படவிருப்பதால், பாதுகாப்பும் அதிவேக இயக்கத் திறனும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மற்றொரு முக்கிய திட்டமாக மைசூரு-பெங்களூரு-சென்னை அதிவேக ரயில் வழித்தடம் உருவாக்கப்பட உள்ளது.
சுமார் 435 முதல் 463 கிலோமீட்டர் நீளத்தில் உருவாகும் இந்த பாதையில், சென்னை-பெங்களூரு பகுதி மட்டும் சுமார் 306 கிலோமீட்டர் தூரம் கொண்டதாக இருக்கும். தற்போது 5 முதல் 7 மணி நேரம் ஆகும் சென்னை-பெங்களூரு பயணம், புல்லட் ரயில் மூலம் வெறும் 75 நிமிடங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.ஜி.எஃப், ஹோஸ்கோட், வைட்ஃபீல்ட் மற்றும் பையப்பனஹள்ளி ஆகிய இடங்களில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. குறிப்பாக கோடிஹள்ளி, ஹைதராபாத் மற்றும் சென்னை வழித்தடங்கள் சந்திக்கும் முக்கிய இணைப்பு மையமாக உருவாகவுள்ளது. அங்கு மிகப்பெரிய பராமரிப்பு மையம், தொழில்நுட்ப பணிமனை மற்றும் பயிற்சி மையங்களும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரு திட்டங்களுக்காக சுமார் 1,757 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்க கர்நாடக அரசு தனி அதிகாரியை நியமித்துள்ளது. திட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, பையப்பனஹள்ளி நிலையம் பெங்களூரு மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் பயணிகள் நகரத்தின் பல பகுதிகளுக்கும் விரைவாகச் செல்ல முடியும். நகரங்களுக்கு இடையேயான பயண முறையில் இந்த திட்டம் புரட்சியை ஏற்படுத்தும் என்றும், விமானப் போக்குவரத்துக்கு மாற்றாக வேகமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து அமைப்பாக இது உருவாகும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
துமகூரு மாவட்டத்திற்கு இந்த திட்டம் மிகப்பெரிய பொருளாதார ஊக்கத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரா பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய நிலையம் மூலம் உள்ளூர் மக்களுக்கு நேரடி அதிவேக ரயில் சேவை கிடைக்கும். தற்போது தொழில்துறை வளர்ச்சியில் முன்னேறி வரும் துமகூரு, சென்னை-பெங்களூரு தொழிற்பேட்டையின் முக்கிய பகுதியாக இருப்பதால், புதிய முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவில் வரக்கூடும். துமகூருவிலிருந்து பெங்களூரு செல்லும் நேரம் 20 முதல் 30 நிமிடங்களாகக் குறையக்கூடும் என்பதால், தினசரி அலுவலக பயணம் மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு இது பெரும் வசதியாக அமையும். மேலும் ஹைதராபாத் நகரத்தையும் சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் அடைய முடிவதால், இடமாற்ற வேலை வாய்ப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்கபள்ளாப்பூர் மற்றும் பெங்களூரு ஊரகப் பகுதிகளும் இந்த திட்டத்தின் மூலம் வேகமான வளர்ச்சியை நோக்கிச் செல்லும் நிலையில் உள்ளன. பழங்கள், பூக்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் இந்த பகுதிகள், வேகமான போக்குவரத்து வசதி மூலம் தங்கள் விளைபொருட்களை பெரிய நகர சந்தைகளுக்கு மிக விரைவாக கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தேவனஹள்ளி விமான நிலையத்துடன் நேரடி இணைப்பு கிடைப்பதால், சரக்கு போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளும் வேகமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு-சென்னை புல்லட் ரயில் திட்டம், தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பொருளாதார மையங்களான தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னிலை வகிக்கும் பெங்களூருவையும், வாகன உற்பத்தி மற்றும் துறைமுக நகரமான சென்னையையும் மிக நெருக்கமாக இணைக்கவுள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக கோலார், ஹோஸ்கோட் மற்றும் வைட்ஃபீல்ட் போன்ற பகுதிகள் புதிய தொழில்துறை மற்றும் குடியிருப்பு மையங்களாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்த அதிவேக ரயில் திட்டங்கள், தென்னிந்தியாவின் நகரமயமாதலை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் என நகர திட்டமிடல் நிபுணர்கள் கருதுகின்றனர். ரயில் நிலையங்களை மையமாகக் கொண்டு புதிய ஸ்மார்ட் நகரங்கள், வணிக வளாகங்கள், ஐடி பூங்காக்கள் மற்றும் குடியிருப்பு திட்டங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. நில மதிப்புகள் வேகமாக உயரக்கூடும் என்பதால், ரியல் எஸ்டேட் சந்தையிலும் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புல்லட் ரயில்கள் மின்சாரத்தில் இயங்கவிருப்பதால், சாலைப் போக்குவரத்து மற்றும் விமானப் பயணங்களுடன் ஒப்பிடும்போது கார்பன் வெளியேற்றம் குறையும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும். அதேசமயம், கட்டுமான பணிகள், பராமரிப்பு மையங்கள், பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிப்பிடப்படுகிறது.
திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பிறகு, பெங்களூரு தென்னிந்தியாவின் அதிவேக ரயில் மையமாக உருவெடுத்து, இந்தியாவின் எதிர்கால போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் வலையமைப்பு, தென்னிந்திய மாநிலங்களுக்கிடையேயான பொருளாதார மற்றும் சமூக ஒருங்கிணைப்பை பலப்படுத்தும் மிகப்பெரிய உள்கட்டமைப்பு புரட்சியாக பார்க்கப்படுகிறது.
வரும் 2026க்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடக்கம்
[youtube-feed feed=1]எப்போது முதல் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும் : ரயில்வே அமைச்சர் பதில்