மும்பை

ரும் 20226 ஜூலை – ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். 

தற்போது நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப்பணிகள் மும்பை – ஆமதாபாத் இடையே நடந்து வருகின்றன. நேற்று ரூ.1.08 லட்சம் கோடி செலவில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டப்பணிகளை மும்பையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம்,

“மும்பை – ஆமதாபாத் இடையே 508 கி.மீ. நீளத்தில் புல்லட் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.  இதில் சூரத் – பிலிமோரா இடையே 2026-ம் ஆண்டு ஜூலை – ஆகஸ்டு மாதத்துக்குள் பணிகளை முடித்து அங்கு புல்லட் ரயில் இயக்கப்படும். பின்னர் ஒவ்வொரு பகுதிகளாக புல்லட் ரயில் சேவை நீட்டிக்கப்படும். 

மும்பை – ஆமதாபாத் இடையே மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் ரயில், எல்லா இடங்களிலும் நின்று செல்லும் ரயில் என இரு சேவைகள் இயக்கப்படும். குறைந்த இடங்களில் நிற்கும் புல்லட் ரயில் 2 மணி நேரத்தில் சென்றுவிடும். எல்லா இடங்களிலும் நிற்கும் ரயில் மும்பையில் இருந்து ஆமதாபாத் செல்ல 2.45 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். 

முந்தைய உத்தவ் தாக்கரே அரசு எல்லா அனுமதியையும் விரைவாகக் கொடுத்து இருந்தால் இப்போது அதிக பணிகள் முடிந்து இருக்கும். ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு வந்த பின்னர் புல்லட் ரயில் திட்ட பணிகள் வேகம் அடைந்தது” 

என்று தெரிவித்துள்ளார்.