சென்னை: இபிஎஸ் அழைத்தால் பேச தயார் என்றும், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்   என  தவெக ஆதரவு முன்னாள் அதிமுக அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கட்சிக்காக “எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த  தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை பிடித்துள்ளது . இந்த கட்சி பெரும்பான்மை இல்லாத நிலையிலும், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. மேலும், அதிமுகவில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என ஒரு தரபபு போர்க்கொடி தூக்கியதால் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், எதிர்கட்சியாக இருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து  எடப்பாடி பழனிசாமி ஒரு தலைமையிலும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றொரு அணியாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி உத்தரவிற்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெட்ட வெளிச்சமானது. மேலும் ஒருவரை ஒருவர் விமர்சித்து புகார் கூறி வந்தனர்.

இந்த பரபரப்புக்கு இடையில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில், தங்களது பதவி ஆசைக்காக கழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளவர்கள், என்னைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வது மிகவும் வேதனைக்குரியதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.

அமைச்சர் மற்றும் வாரியப் பதவிகளுக்காக சுயநலத்துடன் செயல்படும் ஒருசில முன்னாள் அமைச்சர்களிடம், கட்சியின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில்,  தவெக ஆதரவு  அதிமுக மூத்த நிர்வாகி எஸ்பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல், இப்படி ஒரு அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

எடப்பாடியார் அவர்களின் பிரசார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை. ஆனால், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் மிகுந்த தன்னிச்சையாக செயல்பட்டீர்கள். தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல “நான் மட்டுமே எல்லாம்” என்ற நிலையில் மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த கழகத் தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
இதை மட்டுமே கழகப் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களாகிய நாங்கள் எல்லாம் எங்கள் கருத்தாக சொல்லி வருகிறோம்.

மக்கள் அளித்துள்ள தீர்ப்பை மதித்து நாங்கள் செயல்படுகிறோம். மக்கள் ஆதரவு பெற்ற த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு கழகத்தின் ஆதரவை பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கழகத்தை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார். தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம்.

“எந்தத் தியாகமும் செய்யத் தயாராக உள்ளேன்” என்று அறிக்கையில் கூறியுள்ளீர்கள். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்று தான்- “போங்க போங்க” என்று எப்போதும் போல விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அழைத்து பாருங்கள்…!! எல்லாமே மாறும்! கட்சி நல்லா இருக்கும்!

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]