திருச்சி: முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக சார்பில் போட்டியிட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளரான வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் எனக்கோரி திருச்சி தெற்கு மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் இன்று (மே 14) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், போட்டியிட வேண்டும் எனக்கோரி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றித் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றித் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தன்னை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அபார வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில், தேர்தல் ஆணைய விதிகள்படி ஒருநபர் இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால் அதில் ஒரு சட்டமன்றத் தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இதனடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின் திருச்சி கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]