கோயம்பேடு (CMBT Chennai Mofussil Bus Terminus), 2002ம் ஆண்டு ரூ.103 கோடி செலவில் கட்டப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. தற்போது தென் மாவட்ட பஸ்கள் கிளாம்பாக்கத்திற்கும், மேற்கு மாவட்ட பஸ்கள் குத்தம்பாக்கத்திற்கும் மாற்றப்பட்டு வருவதால், கோயம்பேட்டில் சுமார் 36 ஏக்கர் பரப்பளவு காலியாக உள்ளது.
இதையடுத்து அந்த இடத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சி.எம்.டி.ஏ., 3 திட்டங்களை தயாரித்துள்ளது. முதல் திட்டமாக, முழு வளாகத்தையும் பெரிய நகர பூங்காவாக மாற்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பசுமை பரப்பு குறைவாக இருப்பதால் இது பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது திட்டத்தில், பசுமை பகுதியுடன் இணைந்து வணிக கட்டடங்கள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக வளாகங்கள் அமைக்கும் கலப்பு வளர்ச்சி திட்டம் இடம் பெற்றுள்ளது.
மூன்றாவது திட்டமாக, டெல்லி ஹாட் பாணியில் கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு மற்றும் கலாசார மையங்களுடன் கூடிய முழுமையான வணிக மையமாக மாற்றும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
மேலும், மெட்ரோ ரயில் நிலையத்தை மையமாக கொண்டு போக்குவரத்துக்கு ஏற்ற குடியிருப்பு மற்றும் வணிக வசதிகள் கொண்ட புதிய பகுதியையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 3 திட்டங்கள் குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் புதிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் பரிசீலனைக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது.
பசுமை பூங்கா திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், வணிக வளாகம் அமைத்தால் வருவாய் அதிகரிக்கும் என ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
[youtube-feed feed=1]