மத்திய அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக முதலீட்டாளர்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “சம்பளம் வாங்கும்போதே வரி கட்டுகிறோம். அந்த பணத்தை சேமித்து முதலீடு செய்தால் கிடைக்கும் லாபத்துக்கும் மீண்டும் ஏன் வரி?” என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக எழுந்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு நிறைவடையும் நிலையில், நீண்டகால மூலதன ஆதாய வரி (LTCG) குறித்து பலரும் தங்களது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே வரி செலுத்திய வருமானத்தில் இருந்து சேமித்து முதலீடு செய்த பணத்தால் கிடைக்கும் லாபத்துக்கும் மீண்டும் வரி விதிப்பது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

நிதி ஆலோசகரும் முன்னாள் பத்திரிகையாளருமான ஸ்வாதி குமாரி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. அதில், வருமானமே இல்லாமல் தங்களது முதலீட்டை மட்டுமே நம்பி வாழ்க்கையை நடத்தும் இருவருக்கும் ஆயிரக்கணக்கில் LTCG வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அவர்களில் ஒருவர், வேலை இல்லாத நிலையிலும் தனது முதலீட்டு தொகையை எடுத்தே குடும்பத்தை நடத்தி வருகிறார். இருந்தும் அவரிடம் சுமார் ₹49,000 மூலதன ஆதாய வரி கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

“வரி செலுத்துவதற்கு எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. வருமானம் இருந்தால் வரி கட்டுவோம். ஆனால் வரி கட்டிய பிறகு மீதமுள்ள பணத்தை ஓய்வூதியம், அவசரநிதி, குழந்தைகளின் எதிர்காலம் போன்ற தேவைகளுக்காக முதலீடு செய்கிறோம். அந்த முதலீட்டில் கிடைக்கும் லாபத்துக்கும் மீண்டும் வரி விதிப்பது ஏன்?” என்று ஸ்வாதி குமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பங்குச்சந்தை வர்த்தகர் வைபவ் பன்சாலும் இதையே சுட்டிக்காட்டி, பங்கு வாங்கும்போதும் விற்கும்போதும் தரகு கட்டணம், ஜிஎஸ்டி, முத்திரைத் தீர்வை உள்ளிட்ட பல கட்டணங்களை ஏற்கனவே செலுத்துகிறோம். அதற்குப் பிறகும் மூலதன ஆதாய வரி விதிப்பது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மணிகண்ட்ரோல் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பங்குச்சந்தை நிறுவனச் செயலாளர் மஞ்சுளா மூர்த்தி, தற்போது அதிகமானோர் பங்குச்சந்தைக்குள் வருவதால் வரி விதிமுறைகளும் கண்காணிப்பும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக கூறினார். திட்டமிடாமல் முதலீடு செய்வோரே பெரும்பாலும் இழப்பைச் சந்திக்கிறார்கள் என்றும், தற்போதைய சட்டத்தில் மூலதன இழப்பை அடுத்த ஆண்டுகளின் லாபத்துடன் சரிசெய்யும் வசதியும் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதற்கிடையில், பங்கு முதலீட்டுக்கான LTCG வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அதற்கு தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், முதலீட்டாளர்களின் கருத்துகளைக் கேட்க அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இருப்பினும், “ஏற்கனவே வரி கட்டிய வருமானத்தில் செய்த சேமிப்புக்கும் மீண்டும் வரி விதிப்பது நடுத்தர மக்களை இரட்டை வரிச் சுமைக்கு ஆளாக்குகிறது” என்ற குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களிலும் முதலீட்டாளர்களிடையிலும் தொடர்ந்து வலுத்து வருகிறது. இதனால், மத்திய அரசின் பொருளாதார மற்றும் வரிக் கொள்கைகள் மீதான அதிருப்தி வெளிப்படையாகப் பேசப்படும் முக்கிய விவகாரமாக மாறியுள்ளது.