குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் ஒரே ஒரு பங்கில் முதலீடு செய்ததால், ரூ.75 லட்சம் மதிப்பிலான முதலீடு தற்போது ரூ.30 லட்சமாக குறைந்துவிட்டதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், “என் தந்தை 2013-ம் ஆண்டு முதல் சேமித்த பணம் கிடைக்கும் போதெல்லாம், உறவினர் ஒருவர் கூறிய ஒரே ஒரு பங்கில் தொடர்ந்து முதலீடு செய்தார். பங்குச் சந்தை குறித்து அவருக்கு போதிய அனுபவம் இல்லை. முதலீட்டை பல்வேறு நிறுவனங்களில் பிரித்துப் போட வேண்டும் (Diversification) என்ற அடிப்படை விஷயமும் அவருக்குத் தெரியாது” என்று மகன் தெரிவித்துள்ளார்.
ஒரே பங்கை மூன்று வெவ்வேறு டீமேட் (Demat) கணக்குகள் மூலம் மீண்டும் மீண்டும் வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாயாரின் டீமேட் கணக்கில் சுமார் ரூ.30 லட்சம், மாமாவின் டீமேட் கணக்கில் சுமார் ரூ.20 லட்சம், தந்தையின் டீமேட் கணக்கில் சுமார் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.75 லட்சம் முதலீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது என் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு. தற்போது அதன் மதிப்பு ரூ.30 லட்சமாக மட்டுமே உள்ளது. இந்த இழப்பால் என் தந்தை மிகவும் மனமுடைந்து, இதற்கெல்லாம் தானே காரணம் என்று வருத்தப்படுகிறார். உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுப்பதற்குப் பதிலாக, அனுபவமுள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து சரியான ஆலோசனை பெற விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஒரே பங்கில் எல்லா பணத்தையும் முதலீடு செய்தது தவறு என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது. அதைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். இனி என்ன செய்யலாம் என்பதற்கான நடைமுறை ஆலோசனைகள்தான் தேவை” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிலர், “இப்போது இருக்கும் ரூ.30 லட்சத்தையாவது பாதுகாத்துக் கொள்ளுங்கள். நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு வெளியேறி, பல நல்ல பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது” என்று ஆலோசனை வழங்கினர்.
மற்றொருவர், “ரூ.30 லட்சம் இருப்பதே நல்லது; அது பூஜ்ஜியமாக மாறுவதை விட இது மேல்” என்று கூறியுள்ளார்.
இன்னும் சிலர், “அந்த நிறுவனத்தில் புதிய பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை என்றால், எதிர்காலத்தில் பங்கு விலை மீண்டு வர வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக விற்காமல் சிறிது காலம் காத்திருந்து நிலைமையை கவனிக்கலாம்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவர், “ஏற்கனவே இழந்த ரூ.75 லட்சத்தை நினைத்து அடுத்த முடிவை எடுக்க வேண்டாம். இன்று ரூ.30 லட்சம் இருந்தால், அதையே அந்த நிறுவனத்தின் பங்கில் மீண்டும் முதலீடு செய்வீர்களா என்று உங்களையே கேட்டுப் பாருங்கள். பதில் ‘இல்லை’ என்றால், அடுத்த முடிவு என்ன என்பது உங்களுக்கே தெரிந்துவிடும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.