அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை, படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
23ம் ஆண்டுகளுக்கு முன், மதுபானக் கடைகள் தனியாருக்கு ஏலம் மற்றும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், பல இடங்களில் சில பெரிய வியாபாரிகள் கூட்டுச் சேர்ந்து (Cartel) ஏலத்தை கட்டுப்படுத்தியதாக அரசு கூறியது. இதனால் போட்டி குறைந்து, அரசுக்கு கிடைக்க வேண்டிய உரிமக் கட்டண வருவாயும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, தனியார் மதுபானக் கடைகளின் உரிமங்களை ரத்து செய்து, அதே ஆண்டு நவம்பர் 29 முதல் சில்லறை விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதற்கு, தனியார் ஏல முறையில் இருந்த முறைகேடுகளைத் தடுக்க – அரசின் வருவாயை அதிகரிக்க – மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்த – சட்டவிரோத விற்பனை மற்றும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த என பல காரணங்கள் அதிகாரப்பூர்வமாகவும், நிர்வாக ரீதியாகவும் கூறப்பட்டன.
பின்னர் சில ஆண்டுகளில், டாஸ்மாக் மாநில அரசின் மிகப்பெரிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக மாறிய நிலையில் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டில் உள்ளது போல் மது விற்பனையை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது, இதன் முதல் கட்டமாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இதற்குத் தேவையான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைச் சட்டத் திருத்த மசோதா, வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தவெக தலைமையிலான அரசு, “டாஸ்மாக் கடைகளை அரசே நடத்துவதில் கண்ணியம் இல்லை” என்ற காரணத்தை முன்வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அரசின் டாஸ்மாக் கடைகளை மூடும் திட்டத்தின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது. திட்டம் முழுமையாக அமலுக்கு வந்தால், பார்கள் உட்பட சுமார் 2,500 டாஸ்மாக் கடைகள் தனியார் மூலம் செயல்படும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் தனியாரிடம் சென்ற பிறகு, மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை அரசு நேரடியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து உரிமக் கட்டணம் வசூலிக்கப்படும். கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள முறைதான் இதுவும்,” என்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் 4,048 சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. மாநில அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் டாஸ்மாக் முக்கியமான ஒன்றாகும்.
2025–26-ஆம் ஆண்டுக்கான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பின்படி, 2024–25 நிதியாண்டில் மதுபானங்களுக்கான ஆயத்தீர்வை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT) மூலம் மட்டும் ₹48,344 கோடி வருவாய் மாநில அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த ஆண்டும் கூடுதல் வரி விதிப்பு மூலம் மேலும் அதிக வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைப்பதால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பை ஈடுகட்ட, புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறியவும் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.