சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.

இந்த கருத்து கணிப்புகள், மக்கள் குழப்பும் வகையிலேயே அமைந்துள்ளன. பல ஊடகங்கள், திமுக ஆட்சியை பிடிக்கும் என்று  தனது கணிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், சில ஊடகங்கள், அதிமுகதான் ஆட்சியை கைப்பற்றும், அதுதான் மக்களின் மனநிலை என்று தெரிவித்துள்ளது. இதற்கு மாறாக சில ஊடகங்கள், தவெகதான் ஆட்சியை கைப்பற்றும் என  கூறி வருகின்றன.

மொத்தத்தில், தமிழ்நாடு மற்றும் தேசிய  ஊடகங்களின் கருத்து கணிப்புகள் தமிழ்நாட்டின் மக்களை குழப்ப நிலையிலேயே வைத்துள்ளன., தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் யார்?  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா திமுக என்பது, மே 4ந்தேதி பிற்பகல் உறுதியாகி விடும். அதுவரை, பொதுமக்களும், அரசியல் ஆர்வலர்களும் பொறுத்திருப்பதே சாலச்சிறந்தது.

தமிழ்நாட்டு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. கடைசிகட்ட வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல 29) அன்று மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் கருத்துகணிப்புகள் என்ற பெயரில் ஊடங்கள் வெளியிடும்  எண்களும், அதை வைத்துக்கொண்டு அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில், ஒரு கூட்டத்தை வைத்து,  ஊடகங்களில்  விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற  நிகழ்வுகள் மக்களை குழப்ப நிலையிலேயே வைத்திருக்க செய்யும் ஒரு மாய்மாலமாகவே பார்க்கப்படுகீறது.

தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவியது. அதே வேளையில் வரலாறு காணாத நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், அரசியல் ஆர்வலர்கள் பலர், இளைய தலைமுறையினர் மற்றும் முதல்முறை வாக்காளர்களே தேர்தல் முடிவை தீர்மானித்துள்ளனர் என கூறி வருகின்றனர். இதனால், விஜயே முதல்வராவார் என்றும், இல்லை இல்லை பெண்களின் வாக்கு திமுகவுக்குத்தான். அதனால் ஸ்டாலினே மீண்டும்  முதல்வராவார் என்றும் கூறி வருகின்றனர். இதற்கிடையில் ஒரு கோஷ்டி எடப்பாடிதான் அடுத்த முதல்வர் என உருட்டிக்கொண்டிருக் கின்றன. இந்த சலசலப்புக்கு மத்தியில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இருக்கும் இடமே தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்கப்போவது  யார் என்பது குறித்து  தமிழ்நாடு மற்றும் தேசிய ஊடகங்கள் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையான 118 இடங்கள் தேவை. தற்போது வெளியாகி உள்ள பெரும்பாலான கருத்து கணிப்புகளின்படி திமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 என்டிடிவி – பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பின்படி, திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ((திமுக : 125 – 145, அதிமுக : 65 – 80, தவெக : 18- 24, மற்றவை: 2 – 6)

மேட்ரிஸ் கருத்துக்கணிப்பின்படி, திமுக 122 முதல் 132 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (திமுக : 122 – 132, அதிமுக : 87 – 110, தவெக : 10 – 12, மற்றவை: 0- 6,)

ரி பப்ளிக் – பி மார்க் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் திமுக 125 முதல் 145 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (திமுக : 125 – 145, அதிமுக : 65 – 85, தவெக : 16 – 26, மற்றவை: 1 – 6)

சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் கணிப்பின்படி திமுக 145 முதல் 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அக்னி கணிப்பின்படி, திமுக 169 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜேவிசி டைம்ஸ் நவ் கணிப்பின்படி, அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. அதிமுக 128 -147, திமுக – 75-95,  தவெக 8 – 15, மற்றவை 0

வோட் வைப் – சிஎன்என் கருத்து கணிப்பின்படி,   அதிமுக 104 – 125 இடங்களும், திமுக 103-113, தவெக – 4-10 மற்றவை 0 என தெரிய வந்துள்ளது. இதனால் தொங்கு சட்டமன்றம் உருவாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பின்படி, தவெக 98 முதல் 120 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பின்படி,  தவெக 98  – 120 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளது. திமுக 92 – 110, அதிமுக 22 – 32, மற்றவை 0 என தெரிவித்துள்ளது.

மொத்தம் 12 நிறுவனங்கள் கருத்துகணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில்,  7 நிறுவனங்கள் திமுக ஆட்சி தக்க வைத்துக்கொள்ளும் என்றும்,  மூன்று நிறுவனங்கள் அதிமுகவுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. இரண்டு நிறுவனங்கள் த.வெக ஆட்சியை பிடிக்கும் என வெளியிட்டு உள்ளது. இந்த ஊடகத்தினர் நேரடியாக சென்று மக்களை சந்தித்து, அவர்களின் கருத்தை கேட்டார்களா, அல்லது உட்கார்ந்த இடத்திலேயே ஆன்லைன்  தகவல்களை சேகரித்துக்கொண்டு, அதை வைத்து ஒரு மாய்மால கருத்துக்கணிப்பை வெளியிட்டார்களா என்பது,   மே 4-ந்தேதி தெரியும

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் மு.க.ஸ்டாலினே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

இருந்தாலும் டைம்ஸ் நவ் மற்றும் ஜேவிசி அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளது. அதிமுக 128 முதல் 147 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும்,  திமுக 75 முதல் 95 வரை வெல்லும் என்றும், தவெக 8 முதல் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளதும் கணிப்புகளின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஊடகங்களின் இதுபோன்ற கருத்துகணிப்புகளை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. முன்பெல்லாம்  முக்கிய ஊடகங்கள் மட்டுமே, மக்களை நேரடியாக சந்தித்து இதுபோன்ற கருத்து கணிப்புகளை வெளியிடும். ஆனால், தற்போதைய அரசியல் பணத்தை மையமாகவே கொண்டு நடைபெறுவதாலும், பல ஊடகங்கள் ஆன்லைன் மூலமே கருத்துகணிப்புகளை நடத்துவதாலும்,  மக்களும் தெளிவான மனநிலையில் உள்ளதாலும், அவர்களின்   மனநிலையை கணிப்பது அவ்வளவு  எளிதானது இல்லை. அதனால், மக்களை குழப்பும் இந்த கருத்து கணிப்புகளை புறந்தள்ளி, மே 4ந்தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பதை தெரிந்துகொள்வோம். அதுவரை ஊடகங்களின் கோமாளித்தனமான விவாதங்களை புறந்தள்ளுங்கள் வாசகர்களே…

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தந்தி டிவி, சாணக்யா கருத்து கணிப்புகள்….

[youtube-feed feed=1]