சென்னை: அதிமுக எம்எல்ஏக்களிடையே சலசலப்பு எழுந்துள்ள நிலையில், புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்எல்ஏக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 108 இடங்களை கைப்பற்றி தவெக முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் திமுகவும், அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது.
நடிகர் விஜயின் தவெக அதிக இடங்களை கைப்பற்றியும் பெருபான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு காங்கிரஸ் மட்டுமே ஆதரவு அளித்துள்ள நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சித்து வருகிறார்.
இந்த பரபரப்பான சூழலில், அதிமுகவில் ஒரு தரப்பினர் விஜய் ஆதரவு அளிக்க எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் தவெக பக்கம் தாவாமல் இருப்பதை தடுக்க எடப்பாடி முயற்சிகள் மேற்கொண்டு உள்ளார்.
காரணம், ஏற்கனவே விஜய், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே உறவு கிடையாது என்று கூறியதால், அதிமுக தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு தரப்பினர், சிவி சண்முகம் தலைமையில், புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில், ஓ.எஸ். மணியன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சுமார் 27 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளதாக தெரிகிறது. தவெகவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் அணி மாறிவிடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாட்டை அதிமுக தலைமை செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நேற்று (மே 7ந்தேதி)( மாலை 4 மணியளவில் சென்னையில் புதுசேரிக்கு எடப்பாடி கிளம்பினார். புதுச்சேரி சென்ற எடப்பாடி அங்கு தனியார் ரிசார்ட்டில் தங்கி உள்ள அதிமுக எம்எல்ஏக்களை நேற்று இரவு சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அங்குள்ள எம்எல்ஏக்களிடம் அவர் தனித்தனியாகப் பேசி கட்சியின் ஒற்றுமையை உறுதிப்படுத்தி உள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் ரிசார்ட் அரசியல் என்றாலே நம் நினைவுக்கு வருவது 2017-ம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் தான். 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அதுபோன்ற ஒரு சூழல் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது.
அதிமுக கூட்டணி 53 இடங்களை வென்றுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்களைப் பாதுகாக்கவும், ஆட்சி மாற்றத்தில் தங்களது முக்கியத்துவத்தை நிலைநாட்டவும் புதுச்சேரி ரிசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி ரிசார்ட்டில் வெளியாட்கள் நுழையத் தடையும், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]