சென்னை: தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட வேண்டும் என்று கவர்னரின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

118 எம்எல்ஏக்கள் ஆதரவை காண்பித்து பதவியேற்புக்கு வாருங்கள் என ஆளுநர் சொல்ல முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்னும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது. தவெக அமைச்சரவை பதவியேற்புக்கு முன்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே  திமுக கூட்டணி மூலம் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது 5 இடங்களில் வெற்றிபெற்ற  காங்கிரஸ்  கட்சி, அரசியல் ஆதாயத்துக்காக  திமுக உடனான உறவை முறித்துக்கொண்டு தவெக வசம் சாய்ந்துள்ளது.  இதையடுத்து, தவெகவின் பலம் 113 ஆக உயர்ர்ந்துள்ளது. இருந்தாலும் பெரும்பான்மை நிரூபிக்க  இன்னும் 6 பேரின் ஆதரவு தவெகவுக்கு தேவைப்படுகிறது.

அதற்காக விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால், இந்த கட்சிகள் இதுவரை தங்களது ஆதரவை முழுமையாக தெரிவிக்கவில்லை.

இதனிடையே, தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று மீண்டும் இரண்டாவதுமுறையாக ஆளுநரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்  அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், தெளிவான தீர்ப்பை வழங்கவில்லை. எனினும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப் பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையில் தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல.

தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் உணர்வை மதித்து நடக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”

இவ்வாறு கூறியுள்ளார்.

அதுருபோல  த.வெ.க (TVK) ஆட்சி அமைப்பது குறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறுகையில், “…பெரும்பான்மையைப் பெறக்கூடிய முன்கூட்டிய தேர்தல் கூட்டணிகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் (ஆளுநர்) மிகப்பெரிய ஒற்றைக் கட்சிக்கே வாய்ப்பளிக்க வேண்டும்.

அந்த மிகப்பெரிய ஒற்றைக் கட்சியால் பெரும்பான்மையைத் திரட்ட முடியாவிட்டால், அவர்கள் யாருடன் விரும்பு கிறார்களோ அவர்களுடன் இணைந்து தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகளுக்குச் செல்ல வேண்டும். ஒருவேளை தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் உருவானால், அது நான்காவது இடத்திற்கு வரும்.

தற்போது தமிழகத்தில், எந்தவொரு முன்கூட்டிய கூட்டணிகளுக்கும் பெரும்பான்மை இல்லை. வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஆனால், மிகப்பெரிய ஒற்றைக் கட்சியான திரு. விஜய்யின் த.வெ.க, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரைச் சந்தித்துள்ளது. மேலும் அவர்கள் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்…” என்று தெரிவித்தார்.

[youtube-feed feed=1]