சென்னை: மாணவர்களை கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க பள்ளிக்கல்வித் துறை  புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்  வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி அனல் கொதிக்கிறது.  மேலும் பல பகுதிகளில் கடுமையாக வெப்ப அலை வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலோர் பகல் நேரங்களில் வீட்டை விட்டுவெளியே வராத நிலையே உள்து.

இந்த நிலையில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலனைப் பாதுகாப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனைத் கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான முக்கியப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால், அந்த நேரங்களில் மாணவர்களை எக்காரணம் கொண்டும் திறந்த வெளியில் அமர வைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மைதானங்களில் வகுப்புகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், மாணவர்கள் நேரடியாக வெயில் படும் இடங்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வகுப்புகளுக்கும் (P.T. periods) கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெயில் வாட்டி வதைக்கும் நேரங்களில் மாணவர்களைத் திறந்தவெளி மைதானங்களில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்றும், உடற்பயிற்சி வகுப்புகளை நிழலான இடங்களிலோ அல்லது வகுப்பறைகளுக்குள்ளோ ஆக்கப்பூர்வமான முறையில் நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், கட்டாயம் குடைகளைப் பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

மாணவர்களின் உடல் ரீதியான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பள்ளிகளில் போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும். மாணவர்கள் அவ்வப்போது தண்ணீர் பருகுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், வெயில் காரணமாக மாணவர்களுக்குத் தலைச்சுற்றலோ அல்லது மயக்கமோ ஏற்பட்டால், உடனடி முதலுதவி அளிக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் போதுமான அளவு ஓ.ஆர்.எஸ். (ORS) கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முதியோர்களும் இந்த வெயில் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கோடைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் தேவையான விழிப்புணர்வை மாணவர்களிடையே தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]