ஒடிசாவின் கெண்டுஜார் மாவட்டம் பாட்னா காவல் நிலையத்தின் கீழ் உள்ள மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து வருபவர் ஜிது முண்டா. பழங்குடி இனத்தவரான இவரது சகோதரி கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்து போனார்.
இந்நிலையில், சகோதரியின் பெயரில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த இருப்பு ரூ. 19300-ஐ எடுக்க வங்கிக்குச் சென்ற ஜிது முண்டாவிடம் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வங்கி அதிகாரிகள் கேட்ட ஆவணத்தை பெறுவது தொடர்பான வழிமுறைகள் தெரியாத ஜிது முண்டா, புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலை தோண்டி எடுத்துக்கொண்டு திங்களன்று (27-4-2026) மதியம் 1 மணியளவில் வங்கிக்கு வந்துள்ளார்.
இதைப் பார்த்து அரண்டு போன அதிகாரிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து அந்த எலும்புக் கூட்டை மீட்டனர்.
தனது சகோதரி இறந்து போனதாக பல முறை கூறியபோதும் அதைப் பொருட்படுத்தாமல் வங்கி அதிகாரிகள் ஆவண ஆதாரம் கேட்டதால் தனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறிய ஜிது முண்டாவிடம் உரிய ஆவணங்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கூறி அனுப்பிவைத்தனர்.
[youtube-feed feed=1]