சென்னை: தேர்தலையொட்டி, சொந்த ஊருக்கு வாக்களிக்க சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப இன்று (ஏப்.25) முதல் சிறப்பு பேருந்துகள். 2 நாட்களுக்கு மொத்தமாக 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று (ஏப்ரல் 25) மற்றும் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) ஆகிய இரு தினங்களுக்கும் பொதுமக்கள் சிரமமின்றி சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் பயணம் செய்திட ஏதுவாக 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்றைய தினம் சென்னைக்கு தினசரி இயங்கக் கூடிய 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 பேருந்துகளும், முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 2,500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதேபோல், நாளை சென்னைக்கு தினசரி இயக்க கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,184 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 3,345 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மொத்தமாக 14 ஆயிரத்து 508 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஆயிரக்கணக்கானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏற்கனவே புக்கிங் செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்று (சனிக்கிழமை) 19 ஆயிரத்து 676 பயணிகளும், ஞாயிறு அன்று 47,001 பயணிகளும் பயணத்திற்கான முன்பதிவு செய்திருப்பதாக இந்த எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்தை www.tnstc.in அல்லது செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கவும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
