சென்னை: ஒரே மையத்தில் பல வாக்குச்சாவடிகள் இருக்கும்போது,  மக்கள் குழப்பமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடி மையங்கள் வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் ஆணையருமான குமரகுருபரன் மேற்கொண்டுள்ளார்.

ஒரே மையத்தில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள இடங்களில், வாக்காளர்கள் குழப்பமடையாமல் இருக்கப் பல்வேறு வண்ணங் களில் குறியீடுகள் மற்றும் அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிகளை எளிதில் கண்டறியும் வகையில் பல்வேறு வண்ணங்களில் குறியீடுகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் பொதுமக்கள் வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், 100 சதவிகித வாக்குகள் பதிவாகும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் 975 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4,085 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக, மாநகராட்சி சார்பில் வாக்குச்சாவடி மையங்களில், குடிநீர் வசதி, மின் வசதி, கழிவறை, கைப்பிடியுடன் கூடிய சாய்தளம், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதி, வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வண்ணமிடப்பட்ட பாதைகளின் வழியே வாக்காளர்கள் செல்ல உரிய வண்ணம் கொண்ட வழிகாட்டி பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்க, மிகவும் உதவியாக அமைந்திருக்கும்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]