சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் இன்று தென்மாவட்டங்களின் 3 இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது.. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஆட்சி தக்க வைத்துக்கொள்ள திமுகவும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களமிறங்குவதுடன் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் தவெக தலைவர் விஜய் கட்சியும் தனித்து களமிறங்கி உள்ளது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்கட்டமாக கடந்த 18ந்தேதி வருகை தந்து, 3 தொகுதிகளில் ராகுல்காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். 20ம் தேதி மீண்டும் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இன்று வருகை தருகிறார்.
அதன்படி, இன்று கன்னியாகுமரி – லட்சுமிபுரம், நெல்லை – நாங்குநேரி, தூத்துக்குடி – ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றுகிறார்.