சென்னை: முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஆம்ஆத்மி தலைவரும், முன்னாள் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால்- இன்று ரோடு ஷோ சென்று ஆதரவு திரட்டுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நாளை மாலை பிரச்சாரம் ஓய்ந்தது முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 23-ம் தேதி மாலை 6 மணி வரையிலான 48 மணி நேரத்தை அமைதி நேரமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் வேட்பாளர்கள், கட்சித்தொண்டர்கள் நேரடியாக மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யவும், ஊர்வலமாக செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலையொட்டி, ஏப்.21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் எளிதாக வந்து வாக்களிக்க, வாக்குப்பதிவு நாளான ஏப்.23-ம் தேதி, பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களது ஆதரவு வேட்பாளர்களுக்காக களமிறங்கி உள்ளனர்.
அதன்படி, சென்னை கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்காக, அவரது நண்பரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வாக்கு சேகரிக்கிறார். அப்போது ரோடு ஷோவும் நடத்துகிறார்.இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]