சென்னை: ‘மகளிர் இடஒதுக்கீடு’ போர்வையில் உள்நோக்கத்துடன் தொகுதி மறுவரையறைசெய்ய முயற்சிக்கிறது என கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளது.
“பெண்களுக்கு இடஒதுக்கீடு என்ற போர்வையில், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பது உள்நோக்கம் கொண்டது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில முன்னாள் தலைவர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான இரா.முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல மேற்கு வங்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான ஒரு சூழலில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் ஏப்ரல் 16 முதல் 18-ஆம் தேதி வரை நடக்கும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பது என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஆழக்குழி தோண்டிப் புதைக்கக் கூடிய மிகக் கடுமையான கண்டனத்துக்குரிய செயலாகும்.
தமிழ்நாடு, மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத ஒரு கூட்டத்தை நடத்தப் போகிறதா அல்லது இந்த இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரையில் பங்கேற்காமல் வெளியேற வேண்டும் என்பதற்கான முறையில் இந்த சதித்திட்டத்தை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முறையாக விவாதித்து நிறைவேற்றப்படாத காரணத்தால், நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் வந்து குவிகின்றன என்று உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டி இருக்கிறது.
நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 850 ஆக உயர்த்தவே தொகுதி மறுவரையறை நடவடிக்கை எனத் தெரிகிறது. பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கு பாஜக உண்மையில் விரும்பினால், தற்போது இருக்கிற 543 தொகுதிகளில் 33 சதவீத ஒதுக்கீடு செய்யவேண்டும். அதுதான் நேர்மையானது, நியாயமானது.
ஆனால், பெண்களுக்கு இடஒதுக்கீடு என்கிற போர்வையில், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சி என்பது உள்நோக்கம் உடையது. ஏறத்தாழ 307 தொகுதிகள் அதிகரிக்கப்படுவதாக ஊடகங்களிலே செய்தி வருகின்றன. இந்த அதிகரிக்கக்கூடிய 307 தொகுதிகளை எவ்வாறு பிரித்து வழங்க இருக்கிறார்கள் என்பது ஒரு மிகப் பெரிய கேள்விக்குறியாகும்.
மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்படும் என்று சொன்னால், மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவது தமிழ்நாடுதான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேபோல தென் மாநிலங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இதற்கான நோக்கம், பிஜேபி மட்டும்தான் நாட்டில் தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டினால் என்ன மோசம் போய்விடுமா? ஏன் இவ்வளவு அவசரம்?.
தமிழ்நாடு நெல்லுக்கு ஊக்கத்தொகை கொடுக்கக் கூடாது என்று கூறுவது விவசாயிகளை வஞ்சிக்கக் கூடிய செயலாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் வாக்குறுதியே கொடுக்கத் தேவையில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி அவற்றை நிறைவேற்றிவிட்டு போகலாம். மூன்று இலவச சிலிண்டர் கொடுப்பதற்கு பதிலாக சிலிண்டர் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழக மீனவர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு கிடையாது, உடமைகளுக்குப் பாதுகாப்பு கிடையாது, தொழிலுக்கும் பாதுகாப்பு கிடையாது. மத்திய அரசு மனது வைத்தால் இந்த மூன்று பாதிப்பிலிருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியும். அதைப் பற்றி பாஜக தேர்தல் அறிக்கையில் எதுவுமே சொல்லவில்லை. தமிழக மீனவர்களுடைய நலனைப் பாதுகாப்பதற்கான எந்த அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு கூறினார்.