சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் பொன்னேரி உள்பட 3 தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறுகிறது.. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மகளிர் உரிமை தொகை, பெண்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க ரூ.8ஆயிரம் கூப்பன் உள்பட உள்பட மேலும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதற்கு மாற்றாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கி உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மேலும், தவெகவும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அதிரடி கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்து களமிறங்குவதுடன் அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாட்டில் இன்று 3 தொகுதிகளில் ராகுல்காந்தி சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளதாக கட்சி தலைமை அறிவித்து உள்ளது. பின்னர் மீண்டும், 20ம் தேதி மீண்டும் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்ய ராகுல் வர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராகுல்காந்தி இன்று முதல்கட்ட பிரசாரத்திற்காக முற்பகல் 11.10 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். , அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரி செல்கிறார். முற்பகல் 11.45 மணிக்கு பொன்னேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.
அதைத்தொடர்ந்து, பிற்பகல் 1.15 மணிக்கு சோளிங்கர் பிரசார கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி, அங்கிருந்து பிற்பகல் 2.10 மணிக்கு சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் திரும்புகிறார். இதனையடுத்து சென்னையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்கிறார். மாலை 3.45 மணிக்கு திருச்சி சென்றடையும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறையூர் செல்கிறார். துறையூரில் மாலை 4.05 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக திருச்சிக்கு திரும்புகிறார். பின்னர் மாலை 5.40 மணிக்கு தமிழக பிரசாரத்தை முடித்துக்கொண்டு திருச்சியில் இருந்து டெல்லிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்.
இதையடுத்து 2வது கட்டமாக தமிழ்நாடு வரும் 20ம் தேதி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதிகள் என தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஏப்ரல் 19ம்தேதி (நாளை) திருநெல்வேலி, கன்னியாகுமரியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். 20ம்தேதி ஓசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராகுலின் தமிழ்நாடு பிரசார பயணத்தின்போது, முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி பிரசாரம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 20ம் தேதி சென்னை எழும்பூரில் முதல்வருடன், ராகுல்காந்தி ஒரே மேடையில் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]