சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA 2026) – விண்ணப்பப் பதிவு, உத்தேசமாக 2026-ம் வருடம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரியில் வழங்கப்படும் பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் இணையதளத்தில்  வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான (TNEA 2026) விண்ணப்பப் பதிவு மே மாதம் இரண்டாம் வாரம் தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 11 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகள், 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், மத்திய அரசின் 3 பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகார இணைவு பெற்று இயங்கி வருகின்றன.

அதே போல், 2025-26ம் கல்வியாண்டின் தரவுகள்படி 89 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், 368 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க் (BE, B.TEch, B.Arch) படிப்புகளில் உள்ள இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு (TNEA 2026) ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெற்று, கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மே மாதம் இரண்டாம் வாரம் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவை எப்போது தொடங்குவது என்பது குறித்து உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

12-ம் வகுப்பில் முடித்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம், கலந்தாய்வு உள்ளிட்ட விவரங்களை www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்துகொள்ளலாம்.

கடந்த  2025-26 ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்ற 421 கல்லூரிகளில் 190624 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டன

 கடந்தாண்டில் அனுமதிக்கப்பட்ட 1 லட்சத்து 90 ஆயிரத்து 624 இடங்களில், 1 லட்சத்து 53 ஆயிரத்து 445 இடங்கள் ஒற்றை சாளர முறை கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட்டன. பொறியியல் கலந்தாய்வு முடிந்த நிலையில் 37179 இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]