சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

“ஏழை தெய்வங்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதாலா ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை? அல்லது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓட்டுரிமை இருப்பதால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்களா?” என கோபமாக கேள்வி  எழுப்பிய நீதிமன்றம்,.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், சொத்துக்கள் மற்றும் அவற்றின் வாடகை விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மிக முக்கியமான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வெண்ணைமலையில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலுக்குச் சொந்தமான சுமார் 500 ஏக்கர் நிலம் கரூர் நகரின் மிக முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தில் அத்துமீறிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் முறைகேடாகப் பட்டா பெற்றுள்ளதாகக் கூறி, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் கோயில் இணை ஆணையர் ஆகியோரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து ஆணை பிறப்பித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இது நீதிமன்ற அவமதிப்பு வழக்காகத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். “ஏழை தெய்வங்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதாலா ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை? அல்லது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓட்டுரிமை இருப்பதால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்களா?” என நீதிபதிகள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாதது வேதனை அளிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். கோயில் சொத்துக்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய நீதிபதிகள் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்:

ஒவ்வொரு கோயிலுக்கும் சொந்தமான நிலங்கள், கடைகள், வீடுகள் எத்தனை உள்ளன? அவற்றில் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு இருப்பவர்கள் யார்? எவ்வளவு தொகை வசூலிக்கப்படுகிறது? போன்ற அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

கோயில் நிலங்கள் அல்லது கடைகளுக்கான ஏல அறிவிப்புகளை ரகசியமாக வைக்காமல், மிகவும் வெளிப்படையான முறையில் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

கரூர் வெண்ணைமலை கோயில் நிலம் தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்துள்ள சிவில் வழக்குகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நீதிமன்றங்கள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களை மீட்பதற்கும், முறையான வாடகை வசூல் மூலம் கோயில் வருவாயைப் பெருக்குவதற்கும் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ஏற்கனவே கோவில் நிலங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக கூறிய நிலையில், அதில் முழுமையான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில் நிலங்கள் விவரம்! இணைய தளத்தில் வெளியீடு

[youtube-feed feed=1]