அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 21 வயதான தமிழர் வம்சாவளி மாணவி சவிதா சண்முகசுந்தரம், உயிரிழந்தார்.

ஆஸ்டின் நகரின் பிரபலமான பொழுதுபோக்கு பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் 53 வயதான ந்டியாகா டியாக்னே என்பவர் சம்பவ இடத்திலேயே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் சவிதா (21), ரைடர் ஹாரிங்டன் (19), ஜோர்ஜ் பெடர்சன் (30) ஆகியோர் அடங்குவர்.

சவிதா சண்முகசுந்தரம் மே மாதத்தில் பட்டம் பெற இருந்தார். மேலாண்மை தகவல் அமைப்புகள் (Management Information Systems) மற்றும் பொருளாதாரம் (Economics) ஆகிய இரு துறைகளில் படித்து வந்தார். கல்லூரியில் நடன போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் அவர் ஆர்வமாக கலந்து கொண்டதாக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். “அவர் எங்களின் சிறந்த மாணவர்களில் ஒருவர். அவரை இழந்தது மிகுந்த துயரமாக உள்ளது,” என்று பேராசிரியர் ரஸ் ஃபின்னி தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத் தலைவர் ஜிம் டேவிஸ் மாணவர்களுக்கான கடிதத்தில், “அவர் அன்பான பெற்றோரின் மகள், பலரின் நெருங்கிய தோழி. உலகத்தை மாற்ற தயாராக இருந்த மாணவி,” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாணவர் சங்கம் புதன்கிழமை மாலை 7 மணி முதல் 8 மணி வரை கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்காவின் FBI ஆரம்பத்தில் இது தீவிரவாத சம்பவமாக இருக்கலாம் என்று கூறியிருந்தாலும், பின்னர் குற்றவாளியின் நோக்கம் குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.

வட அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்புகளும் சவிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன. Federation of Tamil Sangams of North America அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சவிதா மற்றும் அவரது குடும்பம் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]