டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திடீரென ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை திடீரென ராஜினாமா செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மீண்டும் தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்காததால் விரக்தியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கட்சி தலைமைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக இறுதிக்கட்ட பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இண்டியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தே போட்டியிடுகின்றன. மேலும் பாஜகவும் தனித்து போட்டியிடுகிறது. மூன்று கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றன.
தேர்தலையொட்டிடி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்கின்றனா்.
இந்த பரபரப்பான சூழலில், அதாவது டெல்லி சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனா்.
முதலில், ஆம்ஆத்மி எம்எல்ஏவான மெஹ்ரௌலி எம்எல்ஏ நரேஷ் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்யவதாக அறிவித்து கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினர். அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனக்புரி எம்எல்ஏ ராஜேஷ் ரிஷி கட்சியை விட்டு வெளியேறினார், அப்போதைய திரிலோக்புரி எம்எல்ஏ ரோஹித் குமார் மெஹ்ரௌலியா, கஸ்தூர்பா நகர் எம்எல்ஏ மதன் லால், பாலம் எம்எல்ஏ பாவனா கவுர், ஆதர்ஷ் நகர் எம்எல்ஏ பவன் குமார் சர்மா, பின்னர் பிஜ்வாசன் எம்எல்ஏ பூபேந்திர சிங் ஜூன் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
ஆம்ஆத்மி எம்எல்ஏக்களின் தொடர் ராஜினாமா டெல்லி சட்டசபை தேர்தல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆம் ஆத்மியில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என கூறி அக்கட்சி எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் சேர்ந்தார். தற்போது அவர் பாஜக சார்பில் தேர்தலில் களம் கண்டுள்ளார்.
இத்தகைய சூழலில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து இருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கட்சிதலைமை தங்களுக்கு தேர்தல் நிற்க வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த நிலையில் திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.