திருச்செந்தூர்
இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும் இந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா இன்று (மே 22) வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த திருவிழா முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தையொட்டி வைகாசி மாதம் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணியளவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற்றது.
திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் சிவன், பார்வதி, விநாயகர் மற்றும் அம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்தும், அலகு, வேல் குத்தியும், காவடி சுமந்தும், அரோகரா கோஷம் முழங்க பாதயாத்திரையாக வகின்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் மூன்று இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.