சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண விவகாரம் தொடர்பான வழக்கில்,  பள்ளியின் தாளாளர், செயலாளர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை வருகின்ற மே 14ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், அன்றைய தினம் பள்ளியின் தாளாளர் உள்பட மூவர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி +2 படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளியில மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஒரு தரப்பினர் பள்ளிக்குள் புகுந்து கட்டிடங்களுக்கு தீ வைத்ததுடன், அங்குள்ள பெஞ்சு உள்பட பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், பள்ளிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பள்ளி ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை வழக்கில் இருந்து நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி அளித்த  மனுவின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  கடந்த ஏப்ரல்  16ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்பாமோகன், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இரு ஆசிரியைகளையும் மீண்டும் சேர்க்க வேண்டும். வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது, ஆஜராகிய வழக்கறிஞர் தேவசந்திரன், மனுவிற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை  ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  விசாரணையை தொடர்ந்து, வழக்கை  வரும் மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணியாமூர் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.