சென்னை

திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் பாஜகவுக்குத் தமிழகத்தில் ஒரு தொகுதிகூட கிடைக்காது எனக் கூறி உள்ளார்.

நேற்று மத்திய சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன் திருவல்லிக்கேணியில் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அவர் வெங்கடாசலபதி தெரு, கந்தன் தெரு, பிள்ளையார் கோவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, அவ்வைபுரம், அப்பாராவ் தோட்டம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

தயாநிதி மாறன் அயோத்தியா நகர், டாக்டர் நடேசன் ரோடு, ராஜாஜி நகர், ராமாராவ் கார்டன், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜீப் மற்றும் ஆட்டோவில் சென்றும், நடைப்பயணமாகவும், வீடு வீடாகவும் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது தயாநிதி மாறன்,

“முதல்வர் மு.க.ஸ்டாலின்  டாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பாக தி.மு.க. வேட்பாளராக என்னை மத்திய சென்னை தொகுதி மக்களாகிய உங்களிடம் ஒப்படைத்துள்ளார். இவ்வாறு அவர் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் இந்த தேர்தலில் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். 

நாம் வெற்றி பெற்றால் நாளை இந்தியாவை ஆளும் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்யக்கூடிய பொறுப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது.

நாம் மிக்ஜம் புயலில் நாம் பாதிக்கப்பட்ட போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக முன்வந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.6,000 நிவாரணம் வழங்கினார். புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி வந்து பார்த்தாரா? இல்லை. நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். நாம் கஷ்டப்பட்ட போது வந்து பார்க்காத மோடி இப்போது வருகிறார். 

தமிழகத்துக்கு மோடி ஓட்டுக்கு மட்டும் தான் வருவாரே தவிர, வேறு எதற்கும் வர மாட்டார்.  ‘தமிழ் என் தாய்மொழியாக இல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என்றெல்லாம் சொல்லி வாயிலே வடை சுடுகிறார். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் இதுவரை என்ன செய்துள்ளார் பிரதமர் மோடி? 

மோடி அவர்களே, நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். திராவிட மண்ணில் பிறந்தவர்கள். நீங்கள் எத்தனை நாட்கள் தமிழகத்தில் தங்கினாலும் தமிழகத்தில் ஒரு  தொகுதி கூட கிடைக்காது”

என்று பேசி உள்ளார்.