திருநெல்வேலி

காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறது. 

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. திமுக  கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் என மொத்தம் 10 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் ஒன்றான நெல்லை நாடாளுமன்றத் தொகுதியானது நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இங்கு அ.தி.மு.க. 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், தி.மு.க. 3 முறையும், சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1952, 1957, 1962 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தாணுபிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் போட்டியிட்டு வெற்றி கண்டார். 2009 ஆம் ஆண்டும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ராமசுப்பு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதில் ராமசுப்பு போட்டியிட்டு தோல்வி அடைந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றி பெற்றார்.  கடந்த 2019-ம் ஆண்டு நெல்லை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.. தற்போதைய தேர்தலில் நெல்லை தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நெல்லை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போட்டியிடுகிறது. கூட்டணியில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நெல்லையும் ஒன்றாகும்.