சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் அரிசி, பால் போன்ற உணவுப் பொருட்களை பிளாகஸ்டிக் கவர்களில் விற்க தடை இல்லை என உத்தரவிட்டுள்ளது
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், அன்றாட பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு அந்த விதிவிலக்கு திரும்பப் பெறப்பட்டது.
தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி டி.ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
”பால், பால் பொருட்கள், எண்ணெய், பிஸ்கெட்கள், மருந்து உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்ய அளிக்கப்பட்ட விலக்கை ரத்து செய்து 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், தடை உத்தரவை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு அனுமதி வேண்டும்”
என்று கூறப்பட்டு இருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
”தினசரி உபயோகப்படுத்தும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்யத் தடை இல்லை. எனவே இந்த உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் விற்பனை செய்ய விதிவிலக்கு அளிக்கப்பட்டு, பின்னர் அதைத் திரும்பப் பெற்றுப் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விதிக்கிறோம்”
என்று உத்தரவிட்டுள்ளனர்.