மாமல்லபுரம்

நேற்று மாமல்லபுரத்தில் தொடங்கிய இந்திய நாட்டிய விழா ஒரு மாதம் நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் ஒரு மாதம் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். நேற்று இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது.  இந்த விழா வரும் ஜனவரி 21 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது.

நேற்று மலை 6 மணிக்கு மாமல்லபுரம் கடற்கரைச் சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகில் திறந்தவெளி மேடையில் தொடக்க விழா நடைபெற்றது.  இந்த விழாவுக்கு வந்தவர்களை மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார். மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் முன்னிலை வகித்தார்.

இந்த  இந்திய நாட்டிய விழாவினை தமிழக சுற்றுலாத்துறை ஆணையர் காகர்லா உஷா, சுற்றுலாத்துறை இயக்குநர் மணிவாசகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜி.ராகவன், பேரூராட்சி உறுப்பினர்கள் எம்.வி.மோகன்குமார், வள்ளி ராமச்சந்திரன், லதாகுப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய நாட்டிய விழாவில் ஒரு மாதம் முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் பரதநாட்டியம், ஒடிசி, கதகளி, குச்சுபுடி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியாக மதுரை கோவிந்தராஜ் குழுவினரின் கரகம், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பெங்களூரு கலாம்சூ குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று நிகழ்வில் வெளிநாட்டுப் பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.