அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர்
பல்லாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த வீரசோழீஸ்வர மன்னர், சூரியதோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், நாடு, வீடு, பேறு என அனைத்தும் செழிப்பின்றி இருந்தது. அச்சம்கொண்ட மன்னர் தனது குருவிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்யும்படி கூறினார். அதன்படி, வில்வ வனமாக இருந்த பகுதியை சீரமைத்து கோயில் எழுப்பினார்.
மன்னர், இங்கு நடராஜரை உற்சவராக வைக்க விரும்பி, அவரை சிலையாக வடித்த போது இரண்டு முறை சரியாக அமையவில்லை. கோபமடைந்த அவர், அடுத்த சிலை சரியாக அமையவில்லை எனில் சிற்பிக்கு மரணதண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார். வருந்திய சிற்பி இறைவனிடம், “மன்னர் கையால் உயிர் போவதை விட நீயே எனது உயிரை எடுத்துக் கொள்” என முறையிட்டார். மனமிரங்கிய நடராஜர், அவருக்கு அருட்காட்சி தந்து, அழகிய அம்சத்துடன் தானாகவே சிலைவடிவில் அமைந்தார். தாண்டேஸ்வரர் எனும் திருப்பெயரில் அழைக்கப்படும் இவரது பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது.
மூர்த்தி, தலம், தீர்த்த சிறப்புடன், பெரிய கோயில் எனப்படும் இத்தலம் அமராவதி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுவாமிக்கு இடப்புறம் அம்பாள் தனிச்சன்னதியிலும், அவளுக்கு முன்பகுதியில் ஜேஷ்டாதேவி, பிரகாரத்தில் சுந்தரவிநாயகர், பாலமுருகன், சூரியன், ஐயப்பன், மகாவிஷ்ணு, துர்க்கை, பைரவர், நின்ற நிலையில் நவக்கிரகங்கள், மேற்கு நோக்கியபடி சனீஸ்வரன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். கல்மண்டபம் போல் உள்ள இங்கு கருவறைக்கு பின்புறம் உள்ள அக்னீஸ்வரர் சன்னதியும், 32 தத்துவங்களை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்ட தூண்களும் கலையம்சத்துடன் உள்ளன.
இப்பகுதியை குமண மன்னர் ஆட்சி செய்ததால் “குமணன் நகர்” எனவும், வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் “குழுமூர்” எனவும் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அதுவே மருவி “கொழுமம்” எனப்படுகிறது.
தில்லையில் அமைந்துள்ளது போலவே, இடது காலைத் தூக்கியபடி ஆனந்த தாண்டவ கோலத்தில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் நடராஜர் காட்சி தருகிறார். எனவே, இத்தலம் “தென் சிதம்பரம்” எனப்படுகிறது. இவரை வணங்கிட கலைகளில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.
தெட்சிணாமூர்த்திக்கு நான்கு சீடர்கள் உண்டு. ஆனால், இங்கு கோஷ்டத்தில் (கருவறை சுற்றுச்சுவர்) உள்ள தெட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் இரண்டுசீடர்கள் தனியே தவக்கோலத்தில் அமர்ந்துள்ளனர்.
திருவிழா:
திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், ஆனிஉத்திரம், மகாசிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம்.
கோரிக்கைகள்:
திருமணத்தடை நீங்க, சனிதோஷங்கள் நீங்க, கலைகளில் சிறக்க வேண்டலாம்.
நேர்த்திக்கடன்:
புத்தாடை சாத்தி, விசேஷ அபிஷேகங்கள் செய்யலாம்.